ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்


ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
x

சாத்தூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள சிவனனைந்தபுரம் சோதனை சாவடியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாத்தூர் டோல்கேட் அருகில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காருடன், மற்றொரு காரும் வேகமாக சென்றதாக சாத்தூர் நகர் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிவனனைந்தபுரம் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக கார் வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் சென்று விட்டது.

வாலிபர் கைது

2-வது வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் காரை ஓட்டி வந்தது தூத்துக்குடி மாவட்டம் நடுநாலுமுனைகிணறு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், காரை சோதனை செய்த போதது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 14 மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் திருமங்கலத்தில் இருந்து திருச்செந்தூர் கொண்டு செல்வதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை மூடை பறிமுதல்

பின்னர் காரையும், புகையிலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story