தற்காப்பு கலை பயிற்சிக்காக ரூ.1½ லட்சம் மதிப்பில் தரை விரிப்பு
பள்ளி மாணவ-மாணவிகளின் தற்காப்பு கலை பயிற்சிக்காக ரூ.1½ லட்சம் மதிப்பில் தரை விரிப்பு பொன்.கவுதமசிகாமணி எம்.பி.வழங்கினார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் பெண்காக் சிலாட் தற்காப்பு கலை பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஹரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் உள்ளிட்ட பரிசுகளை பெற்றுள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் தற்காப்பு கலை பயிற்சி பெறுவதற்கு தரை விரிப்பு(மேட்) வாங்கி தருமாறு பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணியிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற அவர் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது சொந்த செலவில் ரூ.1½ லட்சம் மதிப்பில் தரை விரிப்பை பயிற்சியாளர் தனுஷ், பயிற்சி உதவியாளர் அபு மற்றும் மாணவர்கள், பெற்றோர்களிடம் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசிய அவர், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கென்னடி, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, நிர்வாகிகள் செந்தில், ஏழுமலை, விசு, தொ.மு.ச.நிர்வாகிகள் திராவிடமணி, அன்பழகன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.