கெங்கவல்லி அருகே தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த 1½ வயது குழந்தை பரிதாப சாவு


கெங்கவல்லி அருகே  தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த  1½ வயது குழந்தை பரிதாப சாவு
x

கெங்கவல்லி அருகே தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த 1½ வயது குழந்தை பலியானது.

சேலம்

கெங்கவல்லி

1½ வயது குழந்தை

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ராம்குமார் (வயது 32), விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது.

நேற்று இவருடைய 1½ வயது குழந்தை ருத்ரா வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. புஷ்பலதா அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது தனது மாமியார் பச்சையம்மாளை குழந்தையை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு சென்றார். மீண்டும் காலை 11 மணியளவில் புஷ்பலதா வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக மாமியாரிடம் விசாரித்தார். அதற்கு குழந்தை தூங்கி கொண்டிருந்ததால், நான் சமையல் வேலை செய்து கொண்டிருந்தேன் என கூறி உள்ளார்.

உடனே குழந்தையை அவர்கள் இருவரும் வீடு முழுவதும் தேடி விட்டு வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் பார்த்தனர். அங்கு கண்ட காட்சி அவர்களை உறைய செய்தது.

தண்ணீர் தொட்டிக்குள்...

குழந்தை அந்த தண்ணீர் தொட்டிக்குள் மூச்சு திணறி மயங்கி கிடந்தது. உடனே அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று கூறினார். இதையடுத்து குழந்தையை பார்த்து தாயும், பாட்டியும் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் அங்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

தவறிவிழுந்து சாவு

மேலும் சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை தூங்கி எழுந்தவுடன், தாயை தேடி தவழ்ந்து வீட்டுக்கு வெளியே வந்து தண்ணீர் தொட்டியை எட்டி பார்த்து தவறி விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

தண்ணீர் தொட்டிக்குள் 1½ வயது பெண் குழந்தை தவறிவிழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் கெங்கவல்லி அருகே சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story