வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் அனுமதியின்றி அல்லேரி மலையில் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களைக் கண்டறிந்து நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்வதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் அணைக்கட்டு போலீசார் நேற்று அல்லேரி மலைக்கு சென்றனர்.
அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுந்தரேசன் ஆகியோரையும் போலீசார் உடன் அழைத்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிலர் தப்பி ஓடிவிட்டனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள வீடுகளில் சோதனை செய்தபோது உரிமம் இன்றி வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.