மதுரையில் லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.10¾ கோடி இழப்பீடு
மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டு, அதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.10¾ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டு, அதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.10¾ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
ஐகோர்ட்டில் லோக் அதாலத்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் மதுரை ஐகோர்ட்டில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. இதில் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்தி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் பல்வேறு வழக்குகளை விசாரித்தனர். மொத்தம் 320 வழக்குகள் சுமுக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
முடிவில் 16 வழக்குகள் முடிக்கப்பட்டன. இதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 27 லட்சத்து 41 ஆயிரத்து 460-ஐ வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் மோகன்தாஸ், பூபாலன், சிவசுப்பிரமணியன், வக்கீல்கள் ஜெயஇந்திராபடேல், முகமது மைதீன், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
லோக் அதாலத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழு பொறுப்பு அதிகாரியும், ஐகோர்ட்டு பதிவாளருமான (நீதித்துறை) வெங்கடவரதன் செய்திருந்தார்.
மாவட்ட கோர்ட்டு
இதே போல மதுரை மாவட்ட கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவா கடாட்சம் தலைமையில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் 170 வழக்குகள் சுமுக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாவட்ட நீதிபதி நாகராஜன், சார்பு நீதிபதி பாரதிராஜா ஆகியோர் அடங்கிய அமர்வுகள் வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டன. முடிவில் 162 வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.8 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரத்து 385-ஐ பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ மகேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ரூ.10 கோடி இழப்பீடு
ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று நடந்த நிகழ்ச்சி மூலம் ரூ.10¾ கோடியை இழப்பீடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.