சென்னை அண்ணா ஆர்ச் பகுதி ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் நாளை முதல் 10 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா ஆர்ச் பகுதி ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் நாளை முதல் 10 நாட்கள் போக்குவரத்து மாற்றம்.
சென்னை,
சென்னை அண்ணா ஆர்ச் பகுதி ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலை சரி செய்ய நாளை (சனிக்கிழமை) முதல் 10 நாட்கள் சோதனை அடிப்படையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கோயம்பேடு பகுதியில் இருந்து அமைந்தகரை நோக்கி ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் இடதுபுறம் திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் சென்று, பின்னர் 'யு டர்ன்' போட்டு ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை அடைந்து அமைந்தகரை போகலாம். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு போக விரும்புவோர், மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கிசெல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில், பாதசாரிகள் கடக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தங்கு தடையின்றி போகலாம். அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள், அண்ணா ஆர்ச் சந்திப்பில், பாதசாரிகள் கடக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், வலது புறம் திரும்பி தங்கு தடையின்றி போகலாம்.
கோயம்பேட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில், அண்ணா ஆர்ச்சில் 'யு டர்ன்' எடுத்து அண்ணா ஆர்ச்சில் வலது புறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையலாம். இதன் மூலம் அண்ணா ஆர்ச் பகுதியில் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் குறையும்.
இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.