ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் 3 டிராவல் பேக்கில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கர்நாடகா மாநில பாகல்கேட் அடுத்த ஹாண்டரகளா பகுதியை சேர்ந்த பீமாப்பா பெலகல் என்பவரது மகன் பாவடெப்பா (வயது 29) என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story