10 கி.மீ. தூரம் கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரம்
பருவமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க கூடலூரில் 10 கி. மீட்டர் தூரம் கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
பருவமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க கூடலூரில் 10 கி. மீட்டர் தூரம் கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ள பாதிப்புகள்
இந்தியாவின் 2-வது சிரபுஞ்சி, தென்னகத்தின் நீர் தொட்டி என பல்வேறு பெருமைகளை பெற்ற கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த காலத்தில் பாண்டியாறு, மாயாறு, பொன்னானி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதுதவிர ஆற்று வாய்க்கால்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தநிலையில் கோக்கால் மலை அடிவாரத்தில் இருந்து மேல் கூடலூர், ராஜகோபாலபுரம், காசிம் வயல், துப்புக்குட்டிபேட்டை, 1-ம் மைல் வழியாக பாண்டியாறுக்கு கால்வாய் செல்கிறது. இதேபோல் காளம்புழா, புரமணவயல், 1-வது மைல், வேடன் வயல் வழியாக மற்றொரு கால்வாய் செல்கிறது. தொடர் மழையால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆதிவாசி கிராமங்கள் உள்பட பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
தூர்வாரும் பணி மும்முரம்
மேலும் வீடுகளும், விவசாய பயிர்களும் பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு தாலுகா பகுதியிலும் பேரிடர் தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, தீயணைப்பு, வருவாய் உள்ளிட்ட பல துறையினர் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடலூர் காளம்புழாவில் இருந்து வேடன்வயல் வரை 10 கி.மீட்டர் தூரம் பல இடங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றனர்.