பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்
துபாயில் நடந்த தீ விபத்தில் 2 பேர் பலியானாா்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
சங்கராபுரம்:
துபாயில் பிரிஜ் முராரில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாலி குண்டு மகன் கூடு என்கிற முகமது ரபிக் (வயது 45), சங்கராபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த அப்துல் காதர் மகன் இமாம்காசீம் (36) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து துபாயில் இருந்து 2 பேரின் உடல்களும் சொந்த ஊருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட கலெக்டர் ஷரவன்குமார், போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் முகமது ரபிக், இமாம்காசீம் ஆகியோர் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முகமதுரபிக், இமாம்காசீம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் சார்பில் தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
அப்போது கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் சரவணன், மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.