பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 10 பேர் கைது
செய்துங்கநல்லூரில் சாலைமறியலுக்கு முயன்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
நாடு முழுவதும் கடந்த வாரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனை நடந்தது. இதில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 5 வருடங்களுக்கு அந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை கண்டித்து நேற்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மெயின் பஜார் பகுதியில் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் திடீரென பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அப்துல்காதர் தலைமையில் 10 பேர் திரண்டு கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அவர்களை செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் தடுத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.