மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை
வேங்கைவயல் வழக்கு விசாரணை தொடர்பாக மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
வேங்கைவயல் வழக்கு
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அறிவியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், வழக்கு தொடர்பாக 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களில் 119 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 11 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைக்கு கோர்ட்டு மூலம் அனுமதி கிடைத்தது. இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் முரளி ராஜா உள்பட 3 பேரிடம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடைபெற்றது.
மேலும் 10 பேருக்கு...
இந்த நிலையில் 3 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு புதுக்கோட்டை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 பேரில் 8 பேர் வராத நிலையில், அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டனர்.
இதில் மேலும் 10 பேரின் பெயர் பட்டியலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்ள உள்ளனர். மேலும் 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.