வெறி நாய் கடித்து சிறுமி உள்பட 10 பேர் காயம்
வேலூரை அடுத்த புது வசூரில் வெறிநாய் கடித்ததில் சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
10 பேரை கடித்த வெறி நாய்
வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே உள்ள புதுவசூர் பேங்க் நகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தெருக்களில் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். நேற்று காலை சுமார் 8 மணி அளவில் மாணிக்கவாசகர் தெருவில் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு வெறி நாய் அப்பகுதியில் நடந்து சென்ற மூதாட்டி, ஆட்டோ டிரைவர் மற்றும் 10 வயது சிறுமி உள்பட 5 பேரை கடித்தது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பக்கத்து தெருவிலும் அந்த வெறி நாய் சிலரை கடித்தது. மொத்தம் 10-கும் மேற்பட்டோரை கடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெறி நாய் கடித்தவர்கள் அருகே உள்ள அலமேலுமங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றனர்.
நாய்களுக்கு கருத்தடை
ஆனால் அங்கு வெறிநாய் கடிக்கு தடுப்பூசி இல்லாததால் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு செவிலியர்கள் அறிவுறுத்தினர். பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்கின்றனர். பல்வேறு இடங்களில் உள்ள தெரு நாய்களை பிடிக்காமல் விட்டு விடுகின்றனர்.
அதனால்தான் இது போன்ற செயல்கள் நடக்கிறது. எனவே தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாநகராட்சி துறையினர் பிடித்து கருத்தடை செய்தால் தான் பொதுமக்கள் அச்சமின்றி தெருவில் நடமாடுவார்கள் என்றனர்.