பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர்கள் இயக்க மாநில தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை 5 பேர் கொண்ட நீதிபதிகள் விசாரித்தனர். இதில் 3 நீதிபதிகள் இந்த சட்டம் செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் அறிவித்தனர். இதனால் பெரும்பான்மை அடிப்படையில் இந்த சட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதில் முரண்பாடு, பிரச்சினை உள்ளது. இந்த சட்டத்தின்படி ரூ.8 லட்சம் வருமானத்திற்குள் இருந்தால் முன்னேறிய வகுப்பில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் மற்ற வகுப்பினருக்கு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், அவர்கள் பணக்காரர்கள் என்று சொல்கிறார்கள். ஆகவே இந்த 10 சதவீத இடஒதுக்கீடு முரணாக உள்ளது.
சில மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அதனால் வாக்கு வங்கிக்காக இந்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே மத்திய, மாநில அரசுகள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது பற்றிய விளக்க கூட்டம் கடலூரில் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இவ்வாறு கு.பாலசுப்பிரமணியம் கூறினார். பேட்டியின் போது துணை தலைவர்கள் சரவணன், சிவக்குமார் உடனிருந்தனர்.