தலைமை ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை


தலைமை ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
x

விழுப்புரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதை ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி மனைவி விஜயலட்சுமி (வயது 56). இவர் விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த சூழலில் நேற்று காலை விஜயலட்சுமி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை அக்கம், பக்கத்தினர் பார்த்து திடுக்கிட்டனர். உடனே இதுபற்றி விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

நகை கொள்ளை

அதன்பேரில் அவர், சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு விரைந்து வந்தார். அவர், தனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதோடு வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரும் திருட்டு போயிருந்தது.

விஜயலட்சுமி வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

டிரைவர் வீடு

விழுப்புரம் வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதை கே.வி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் சுகந்தகுமார் (48). இவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரம் அருகே நன்னாட்டில் புதிதாக வீடு கட்டி அந்த வீட்டிற்கு நேற்று முன்தினம் புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் புது வீட்டில் இருந்தனர்.

இதை அறிந்த மர்மநபர்கள், கே.வி.ஆர். நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணி நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். 2 வீடுகளிலும் கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5½ லட்சமாகும். இதுகுறித்த புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story