விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு


விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு
x

தலைவாசல் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

தலைவாசல்:-

தலைவாசல் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயி

தலைவாசல் அருகே வீரகனூர் பேரூராட்சி தென்கரை கிராமத்தில் வசித்து வருபவர் மாது, விவசாயி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஈஸ்வரி தனது விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். வீட்டில் பகல் நேரத்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

இதனிடையே வீரகனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்த மாதுவின் மகள் பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தார்.

10 பவுன் நகை

அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தாயார் ஈஸ்வரிக்கு அவர் தகவல் கூறினார். அதன்பேரில் அங்கு வந்து அவர், பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர்.

சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்தனர். பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story