10% இடஒதுக்கீடு - அமைச்சர் பொன்முடி விளக்கம்


x

மதுரை காமராஜர் பல்கலை. இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில்,அப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும்,அதன்படி 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி பையோ டெக் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற முறையை மாற்றி தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில்,அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு உறுதியாக பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது;-

"அனைத்து பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார். குறிப்பாக,மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இது குறித்து பேசியுள்ளோம்.எனவே,மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும்.

மேலும்,நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைப் போல்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இனி அனைத்து பாடங்களும் முழுமையாக (100 %) நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது",என்று தெரிவித்துள்ளார்.


Next Story