10% இட ஒதுக்கீடு தீர்ப்பு - சட்ட வல்லுநர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்
சென்னை,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் வாசிக்கப்பட்டது. நீதிபதிகள் தனித்தனியாகத் தீர்ப்புகளை வாசித்தனர்.
அந்தத் தீர்ப்பில், ``103-வது அரசியலமைப்புச் திருத்தம் செல்லுபடியாகும். இந்தச் சட்டத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை.பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது செல்லுபடியாகும். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர்ப்பது அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். பாரபட்சமற்ற ஆட்சிக்கு சாதி, வர்க்க வேறுபாடின்றி எல்லா ஏழைகளும் சமமானவர்கள்" என்று கூறி மூன்று நீதிபதிகள் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்" என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆலோசனையில் திமுக எம்.பி. வில்சன் பங்கேற்றுள்ளார்.