வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு 'சீல்'
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கவும் கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார்.
மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து அந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பலர் வாடகை பாக்கியை செலுத்தினார்கள். ஆனாலும் சிலர் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் உதவி கமிஷனர் பிரபுகுமார்ஜோசப் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் குமரவேலு மற்றும் ஊழியர்கள் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். மேலும் மற்ற கடைகளில் வாடகை பாக்கி தொகை ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான கடைக்கு மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும். 6-ந்தேதியன்று வாடகை செலுத்தினால் கூட 18 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.