10 மாணவ-மாணவிகள் படுகாயம்


பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேன் மோதியதில் 10 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேன் மோதியதில் 10 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

வேன் மோதியது

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினசரி அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். துலுக்கப்பட்டி அருகே உள்ள ராஜீவ் காந்தி காலனி பஸ் நிறுத்தத்தில் இவர்கள் வழக்கமாக பஸ் ஏறுவதுண்டு.

நேற்று பஸ் நிறுத்தத்தில் பஸ் நிறுத்தப்படாததால் 10 மாணவ-மாணவிகள் ஆட்டோவில் பள்ளிக்கு புறப்பட்டனர். ஆட்டோவை துலுக்கப்பட்டி நாகராஜன் (வயது 41) என்பவர் ஓட்டி சென்றார். இந்த ஆட்டோ ஆவுடையாபுரம் ெரயில்வே லெவல் கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் நிறுவன வேன் மோதியது.

10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாணவிகள் பாண்டீஸ்வரி (14), ராம பிரியா (14), மாணவர்கள் அபினேஷ் (11), கருப்பசாமி (11), லோகேஷ் (11), பாண்டி (14), எம்.கருப்பசாமி (11), நித்திஷ் என்ற முனியாண்டி (11), அஜய் (11), ஹரிஹரன் (14) ஆகிய 10 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ டிரைவர் நாகராஜனுக்கும் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல அறிந்த கிராம மக்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் உடனடியாக படுகாயம் அடைந்த மாணவ-மாணவிகளும், ஆட்டோ டிரைவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

அமைச்சர் ஆறுதல்

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். சிகிச்சை பெற்று வரும் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவக்கல்லூரி டீன் சங்கு மணியிடம், உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீசார் வேன் டிரைவர் புதுப்பட்டியை சேர்ந்த தடியராஜன் (32) என்பவர்மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் ராஜீவ் காலனி பஸ் நிறுத்தத்தில் நேற்று பஸ் நிறுத்தப்படாததால் தான் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விபத்துக்குள்ளானார்கள் என அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து மறியலில் ஈடுபட்டனர். வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாலா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இனி அனைத்து பஸ்களும் துலுக்கப்பட்டி ராஜீவ் காந்தி காலனி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story