10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவிடைமருதூர் அருகே 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக குடோனில் பதுக்கி வைத்து சிறு, சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக திருவிடைமருதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அம்மாசத்திரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சுமார் 10 டன் எடையுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் சிறு, சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கயல்விழி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அம்மாசத்திரம் சந்தன கணபதி தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 43), அவரது சகோதரர் சிவக்குமார் (46) மற்றும் நேரு நகர் மல்லிகை வீதி வெங்கடேஷ்(43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.