சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில்
செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் பலாத்காரம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர் காதலித்து வந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இந்த தகவலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் செல்வம் ஆகியோர் அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், ராஜசேகர், செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சமயத்தில் ராஜசேகர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி இன்று தீர்ப்பு கூறினார்.
இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராஜேஷ்குமார், செல்வம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.