பாலாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம்


பாலாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம்
x

காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு பாலாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம் கட்ட அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

அடிக்கல் நாட்டு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்பாடி பகுதியில் பொன்னையாற்றின் குறுக்கே ரூ.32 கோடியே 46 லட்சத்தில் புதிய தரைப்பாலம் மற்றும் பொன்னை ஆற்றில் அணைக்கட்டை புனரமைக்கும் பணிக்கு மேல்பாடி சோமநாத ஈஸ்வரர் கோவில் அருகே அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்யாநந்தம் வரவேற்றார்.

அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரைப்பாலம் மற்றும் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.100 கோடியில் பாலம்

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தரைப்பாலம் மற்றும் மேம்பாலம் நீண்ட காலம் உழைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னையில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்.

காட்பாடி அருகே காங்கேய நல்லூர் முதல் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி சில நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் காட்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.

ரூ.1,000 கண்டிப்பாக வழங்கப்படும்

தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

தாயின் மடியாக காட்பாடி தொகுதியை பார்க்கிறேன். வரும் நிதி நிலை அறிக்கையில் காட்பாடி தொகுதியில் மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். சென்னை முதல் பெங்களூரு வரை விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் காட்பாடி அருகே மேல்பாடியில் மட்டுமே பஸ்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த இடத்திலும் பஸ்கள் நிற்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊழல் பட்டியலை வெளியிடட்டும்

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறி இருப்பது குறித்து கேட்டதற்கு, அவர் பட்டியலை வெளியிடட்டும் என்று கூறினார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து கேட்டபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அதனை அவர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதே விதி என்றார்.


Next Story