புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு


புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு
x

தொடர் மழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

புழல்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்ளாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதில் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு வினாடிக்கு 530 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இதில் தற்போது 2,962 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 21 அடியில், நீர் மட்டம் 19 அடியை நெருங்கி உள்ளது.

100 கன அடி திறப்பு

மேலும் மழை நீடிக்கும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை புழல் ஏரியில் இருந்து ஒரு ஷட்டரை மட்டும் திறந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் செங்குன்றம் சாமியார் மடம், வடகரை, வடபெரும்பாக்கம், மணலி, ஆமுல்லைவாயில் வழியாக எண்ணூர் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம், நேமம் ஆகிய ஏரிகள் நிரம்பி உள்ளதாலும், மேலும் 5 நாட்கள் மழைநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாலும் முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

அதன்படி நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியின் 5 கண் மதகில் 2-வது ஷட்டர் வழியாக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை ஒலியும் எழுப்பட்டது.

விரட்டியடிப்பு

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20.75 அடியாகவும், நீர்வரத்து 800 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,764 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பது மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு அதிகளவில் திரண்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ெவள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறும்போது, "செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 20.75 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் கண்காணிக்க 21 மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. 11 துறை அதிகாரிகள் அந்த குழுவில் இருப்பார்கள். 72 இடங்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு 13 இடங்கள் என தெரிந்துள்ளது" என்றார்.

சோழவரம்-பூண்டி ஏரி

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. இதில் 212 மில்லியன் கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. இதில் 818 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 280 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் 155 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


Next Story