100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்
x

சரிவர பணி வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அருகே உள்ள நத்தகாடு பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்று ஒவ்வொரு நாளும் பகுதி வாரியாக வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டும் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு சரிவர பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் டீ களத்தூர்- மணச்சநல்லூர் செல்லும் சாலையில் நத்தக்காடு பஸ் நிலையத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், இணையவழி சேவை பாதிப்பு காரணமாக அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. இதன்காரணமாக எங்களுக்கு சரிவர வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இணையவழியில் பதியாத தொழிலாளர்கள் வேலை செய்தால்கூட அன்றைய சம்பளமும் அவரது கணக்கில் வரவு வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு நாள்தோறும் பணி வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story