100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் போலீஸ் வாகன சோதனையில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:-
சேலத்தில் போலீஸ் வாகன சோதனையில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகன தணிக்கை
சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோரை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் குகை பிரபாத் சிக்னல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வழியாக மொபட்டில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.
2 சிறுவர்கள் கைது
அதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜலார் மாவட்டம் பந்தேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களது மொபட்டில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது, அதற்குள் 50 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் புலிகுத்தி முதல்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 50 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் 2 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கைதான சிறுவர்கள் புகையிலையை பதுக்கி வைத்திருந்த வீட்டை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செவ்வாய்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.