100 மோட்டார்சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்


100 மோட்டார்சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்
x

பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்த 100 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானதால் வத்தலக்குண்டுவில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

மோட்டார் சைக்கிள்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் அருகே விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது அங்கு மோட்டார் சைக்கிள்களை சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்து இருந்தன. வாட்டி வதைக்கும் வெயிலால், தற்போது அவை காய்ந்து கிடந்தன. இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென செடி, கொடிகளில் தீப்பிடித்தது.

சிறிதுநேரத்தில் மள, மளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில மோட்டாா் சைக்கிள்களில் பெட்ரோல் இருந்ததால் அதிலும் தீப்பற்றியது. இதனால் தீயின் வேகம் அதிகரித்தது. மோட்டார் சைக்கிள்களும் தீப்பற்றி எரிய தொடங்கின. மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 100 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின. அவை எலும்புக்கூடுகள் போல் காட்சி அளித்தன.

இதற்கிடையே தீ விபத்துக்கான காரணம் குறித்து, வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story