தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை- ரூ.6 லட்சம் கொள்ளை


கணபதிபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சத்தை மர்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் மோப்பநாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

கணபதிபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சத்தை மர்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் மோப்பநாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.

தொழில் அதிபர்

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தெற்கு ஊரை சேர்ந்தவர் பூதலிங்கம். இவருடைய மகன் முருகன் (வயது 43). இவரது வீடு கணபதிபுரம் தெற்கு ஊரில் இருந்து லெமூர் கடற்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. வீட்டின் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

முருகனுக்கு மேரிபெல் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் படித்து வருகிறார். 2-வது மகனும், மகளும் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் முருகன் கடந்த 13-ந் தேதி மாலையில் மூத்த மகனை பார்ப்பதற்காக வீடு மற்றும் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் வளர்த்து வரும் நாயை முருகனின் தந்தை பூதலிங்கம் கவனித்துக் கொண்டார்.

பூதலிங்கம் நேற்று முன்தினம் காலையில் முருகனின் வீட்டுக்கு வந்து நாய்க்கு உணவு வைத்துவிட்டு சென்றார். இதுபோல் நேற்று காலையிலும் நாய்க்கு உணவு வைப்பதற்காக முருகனின் வீட்டுக்கு வந்தார்.

பூட்டு உடைப்பு

அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூதலிங்கம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டுக்குள் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. படுக்கை அறையில் இருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டது. மேலும் நிதி நிறுவனத்திலும் பூட்டு உடைக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சிதறிக் கிடந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூதலிங்கம் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம நபர்கள் முருகனின் வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது. ஆனால் முருகன் வீட்டில் இல்லாததால் நகை, பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போனதா? என்பது முதலில் தெரியவில்லை.

100 பவுன் நகை- ரூ.6 லட்சம் ரொக்கம்

இதைத்தொடர்ந்து போலீசார் முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்த விவரங்களை அவரிடம் தெரிவித்தனர். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் 100 பவுன் நகையும், ரூ.6 லட்சம் ரொக்கமும் வைத்து இருந்ததாக போலீசாரிடம் முருகன் கூறினார். இதனையடுத்து போலீசார் பீரோவில் பார்த்த போது நகையும், பணமும் இல்லை. மேலும் பீரோவில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.

இதனால் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதே சமயம் நிதி நிறுவனத்தில் பணம் வைக்காததால் அங்கு கொள்ளை சம்பவம் அரங்கேறவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதிலும் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு ெசய்யப்பட்டது.

மோப்ப நாய்

மோப்ப நாய் குட்கி கொள்ளை நடைபெற்ற வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த நாய் வீட்டில் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்துவிட்டு வேகமாக வெளியே ஓடி வந்தது. பின்னர் வீட்டுக்கு பின்புறம் இருந்த தெருவில் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மோப்ப நாய் ஓடியதை வைத்து பார்த்த போது வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் பின்புறம் உள்ள தெரு வழியாக தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே வீட்டின் உரிமையாளரான முருகன் ஊருக்கு வந்த பிறகு தான் வீட்டில் வேறு ஏதேனும் பொருட்கள் கொள்ளை போனதா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதற்கட்டமாக வீட்டின் அருகே உள்ள ஒர்க் ஷாப் மற்றும் பிற வீடுகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஊழியர்களின் கைரேகை சேகரிப்பு

முருகன் வெளியூர் சென்ற நேரத்தில் இந்த கொள்ளை அரங்கேறி இருப்பதால் அவரை பற்றிய விவரம் தெரிந்தவர்கள் மூலம் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரது நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 4 ஊழியர்களின் கைரேகையை போலீசார் சேகரித்தனர். அந்த கைரேகை வீட்டில் இருந்த கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது.

ராஜாக்கமங்கலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெருவிளக்குகளை அணைத்து கொள்ளையை அரங்கேற்றிய ஆசாமிகள்


ராஜாக்கமங்கலம் கணபதிபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகையையும், ரூ.6 லட்சம் ரொக்கத்தையும் அள்ளிச் சென்ற மர்ம நபர்கள் கொள்ளையில் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வீடு மற்றும் நிதி நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் போலீசிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காக புதிய முறையை கையாண்டு உள்ளனர். அதாவது வீட்டில் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள். பீரோவிலும் மிளகாய் பொடி இருந்தது. இதன் காரணமாக தான் மோப்ப நாயால் சரியாக மோப்பம் பிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் முருகனின் வீட்டிலும், நிதி நிறுவனத்திலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் உபகரணத்தை (ஹார்ட் டிஸ்க்) மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். அதோடு கொள்ளை நடந்த பகுதியில் நள்ளிரவு 12.30 மணியளவில் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளன. தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகம் தெரியாமல் இருக்க தெருவிளக்குகளை மர்ம நபர்கள் அணைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த கொள்ளையில் துப்பு துலக்குவது போலீசாருக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாய் வாயை மூட பிஸ்ெகட்

கொள்ளை நடந்த வீட்டில் முருகன் ஒரு நாயை வளர்த்து வருகிறார். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்த போது அந்த நாய் குரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாயின் வாயை மூட மர்ம நபர்கள் பிஸ்ெகட் போட்டுள்ளனர். பிஸ்கெட்டை பார்த்ததும் நாய் வாலை ஆட்டிக் கொண்டு குரைப்பதை நிறுத்திவிட்டது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் இதை சாதகமாக வைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

------



Next Story