வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்
வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்
தஞ்சையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
அபராதம்
தஞ்சை மாவட்டத்தில், கடந்த 26-ந் தேதி முதல், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்பேரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் அபராதம்விதித்து வருகிறார்கள். அதன்படி நேற்று காலை தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் மறித்து அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.
ஹெல்மெட் அணிய வேண்டும்
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
தஞ்சை மாநகரில் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகிறார்கள். இருப்பினும், பொதுமக்களுக்கு அவ்வப்போது நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.