வேதாரண்யத்தில் 1,000 டன் மாங்காய்கள் தேக்கம்
புதியவகை பூச்சி தாக்குதலால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் வேதாரண்யத்தில் 1,000 டன் மாங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
புதியவகை பூச்சி தாக்குதலால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் வேதாரண்யத்தில் 1,000 டன் மாங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5ஆயிரம் ஏக்கரில் சாகுபடி
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் செந்தூரா, பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு என 10-க்கும் மேற்பட்ட மா வகைகள் விளைவிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் டன் மாங்காய்கள் மாபழத்திற்காக விளைவிக்கபட்டு தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது மாம்பழத்திற்காக மாங்காய்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மாங்காயில் புதிய வகையான பூச்சிகள் தாக்கி கருப்பு புள்ளிகள் ஏற்பட்டுள்ளது.
மரத்திலேயே முற்றி வீணாகிறது
இந்த புதிய வகை நோய் அதிக அளவு தாக்கியுள்ளதால் வியாபாரிகள் மாங்காயை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. கருப்பு புள்ளி இல்லாத மாங்காய்கள் ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வேதாரண்யம் பகுதியில் ஆயிரம் டன் மாங்காய் அறுவடை செய்யாமல் மரத்திலேயே முற்றி வீணாகிறது.
இதனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆலோசனை
இந்த நிலையில் புதிய வகை பூச்சி தாக்குதலுக்கு என்ன தீர்வு என ஆய்வு செய்ய நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருந்து வேளாண் விஞ்ஞானிகள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.