குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்யப்பட்டு குகநாதீஸ்வர பெருமானுக்கு சங்காபிஷேகமும் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு வாகன பவனி போன்றவை நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேள தாளங்கள் முழங்க வலம் வந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.