100-வது ஆண்டு நிறைவு மாநாட்டு ஜோதி ராணிப்பேட்டைக்கு வந்தது
பொது சுகாதாரத் துறையின் 100-வது ஆண்டு நிறைவு மாநாட்டு ஜோதி ராணிப்பேட்டைக்கு வந்தது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 100-வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான மாநாட்டு ஜோதி சென்னையில் இருந்து கடந்த 10-ந் தேதி புறப்பட்டது. 14-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தை வந்தடைந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஜோதியை பெற்றுக் கொண்டு, மீண்டும் வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த ஜோதி தமிழகம் முழுவதும் சுமார் 3,315 கிலோமீட்டர் பயணித்து வருகிற 5-ந் தேதி சென்னை மாநாட்டு அரங்கத்தை சென்றடைய உள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், ஓய்வு பெற்ற சுகாதார துறை அலுவலகங்கள், பணியாளர்கள் என 350 பேருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.