முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி இருக்கிறேன்:வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும்பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி இருக்கிறேன். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. 35-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான தரவுகளை அரசு தயாரித்து வருகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி இருக்கிறேன். எனவே இட ஒதுக்கீடு குறித்து விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக, நலமாக வாழ வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல உயர்ந்த கல்வி கிடைக்க வேண்டும். மது, புகையிலை இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். இவை இரண்டும் எந்த வழியிலும் மக்களிடையே வரவே கூடாது என்ற ஆசை இருக்கிறது.
கடவுளிடம் 2 வரம் கேட்பேன்
எனது கனவில் கடவுள் வந்தால், மது இல்லாத தமிழகம், சொட்டு மழைநீர் கூட வீணாக கடலில் போய் கலக்கக்கூடாது ஆகிய 2 வரம் மட்டும் கேட்பேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வன்னியர் சங்க மாநில செயலாளர் கருணாநிதி, சமூக நீதி மாநில செயலாளர் வக்கீல்பாலாஜி, பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், மாநில துணை தலைவர் சங்கர், நகர செயலாளர் ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி, முன்னாள் நகர செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் வானூர் (மத்திய) மகாலிங்கம், (கிழக்கு) ரகு, (மேற்கு) கோபால், கிளியனூர் (தெற்கு) ராஜ்குமார், (வடக்கு) சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.