10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் டாக்டர் ராமதாஸ் பேச்சு


10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x

வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது, 10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ராணிப்பேட்டை

வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது, 10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பொதுக்கூட்டம்

ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில், உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் வாலாஜா பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் வக்கீல் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எல்.இளவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வன்முறையால் சாதிக்க முடியாது

சாலை மறியலில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு இன்றைக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பதை ஒதுக்கி விட்டு இடப்பங்கீடு என்று கூற வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுத்து ஆவன செய்வதாக கூறியுள்ளார். முதல்-அமைச்சரிடம் இதுகுறித்து போனில் 15 நிமிடம் பேசினேன். எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும். முதல்-அமைச்சர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

வீரம் என்பது வன்னியர்களின் ரத்தத்திலே உள்ளது. இனி விவேகத்தோடு செயல்பட வேண்டும். இந்த மாவட்டம் கருப்பு மாவட்டமாக வரைபடத்தில் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வாணியம்பாடியில் இருந்து சைக்கிள் பேரணியாக 120 கி.மீ சைக்கிளில் பயணம் செய்தேன்.

போராட்டங்கள்

போராட்ட குணம் என்னை விட்டு போகவில்லை. உலக அளவில் நாம் நடத்திய 7 நாள் சாலை மறியல் போராட்டம் போல் வேறு எதுவும் இதுவரை நடைபெற்றது இல்லை. இது தவிர அனைத்து மக்களுக்காகவும் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். கோபமும் வீரமும் என்னை விட்டு அகலாது.

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதற்கு நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இன்றைக்கு பெற்று தந்து உள்ளோம். பெண் குழந்தைகளை பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள். பெண் குழந்தைகளை பார்த்தாலே நீங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. இட ஒதுக்கீட்டில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.'

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் எஸ்.பி.சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் ராஜா, மாநில சமூக நீத பேரவை துணை செயலாளர் வக்கீல் சக்கரவர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேல், வக்கீல் ஜானகிராமன், பகவான் கார்த்திக், ஒன்றிய செயலாளர் சபரி கிரீசன் உள்ளிட்ட பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா நகர செயலாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

முன்னதாக இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


Next Story