முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வில் 106 பேர் தேர்வு


முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வில் 106 பேர் தேர்வு
x

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வில் 106 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான பி.லிட் தமிழ், பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா பயண மேலாண்மையியல், பி.எஸ்.டபிள்யூ சமூகப்பணி, பி.காம் வணிகவியல், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், உயிர்த்தொழில்நுட்பவியல், பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல் ஆகிய 14 இளநிலை பட்ட வகுப்புகளுக்குரிய முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு நேற்று நடந்தது. கல்லூரியின் முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். கல்லூரிக்கு இணைய வழியாக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மொத்தம் 3,600 மாணவ-மாணவிகள், அவர்கள் பெற்ற மதிப்பெண் தரவரிசையின்படி கலந்தாய்விற்கு வரவழைக்கப்பட்டனர். பாடப்பிரிவுகளின்படி தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நேற்று 1,280 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றதில், 106 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் கல்வி கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தினர். கல்லூரியில் வருகிற 10-ந்தேதி 2-ம் கட்ட கலந்தாய்வும், 16-ந்தேதி 3-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. கல்லூரியில் நேற்று முன்தினம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 252 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்ற கலந்தாய்வில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story