புல்லூர் தடுப்பனையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி பலி
வாணியம்பாடி அருகே பாலாற்றில் கட்டி உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
10-ம் வகுப்பு மாணவி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில் பாலாற்றில் புல்லூர் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோவிலில் நேற்று சாமி கும்பிடுவதற்காக, திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் குடும்பத்தினருடன் சாமி கும்பிட வந்துள்ளார். இவரது மகள் கலைச்செல்வி (வயது 14). இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
அப்போது கோவிலுக்கு அருகாமையில் உள்ள தடுப்பணையில் குடும்பத்துடன் தண்ணீரில் குளித்துக் கொண்டு இருந்தார்.
தண்ணீரில் மூழ்கி பலி
அந்த நேரத்தில் திடீரென கலைச்செல்வி தண்ணீரின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீரில் மூழ்கியவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் தகவல் பெற்று மேல் நடவடிக்கைக்காக குப்பம் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.