10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
திருவேங்கடம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவன்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அழகாபுரி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். விவசாயியான இவரது மனைவி பவுன்மேரி. இவர்களுடைய மூத்த மகன் ராம்குமார் (வயது 15). இவர் அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி ராம்குமார் வீட்டில் படிக்காமல் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அவரது தந்தை வடிவேல், தேர்வு வருகிறது. படிக்காமல் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் என்று கண்டித்தார்.
விஷம் குடித்து சாவு
இதனால் மனவேதனை அடைந்த ராம்குமார் வீட்டில் தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார்.
இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கு ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் முன்னேற்றம் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
சோகம்
இதுகுறித்து திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.