காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட 10-ம் வகுப்பு மாணவி
பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து உயிரை விட்டது, 10-ம் வகுப்பு மாணவி என்பதும், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் பிறந்த நாளில் தற்கொலை செய்ததும் தெரிந்தது.
பரங்கிமலை,
சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் காதல் ஜோடி பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் இளம்பெண் தலை பிளந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். மாம்பலம் ரெயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
10-ம் வகுப்பு மாணவி
மேலும் இது பற்றி மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர், உள்ளகரம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (வயது 20) என்பதும், இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
பலியான பெண், அதே உள்ளகரத்தை சேர்ந்த சிம்ரன் (14) என்பதும், இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இளங்கோவனுக்கும், சிம்ரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படிக்கும் வயதில் காதல் செய்ய வேண்டாம் என கண்டித்ததுடன், அறிவுரை கூறினர். இதனால் காதல் ஜோடி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
காதலனுக்கு பிறந்த நாள்
இந்தநிலையில் இளங்கோவனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால் காதலி சிம்ரனுடன் மாலையில் ஒன்றாக சுற்றி வந்தார். அப்போது தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நாம் ஒன்றாக ேசர்ந்து வாழ முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே இருவரும் கட்டிப்பிடித்தபடி மின்சார ரெயில் முன்பாய்ந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதில் பள்ளி மாணவி சிம்ரன் பலியாகி விட்டார். கல்லூரி மாணவர் இளங்கோவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.