கருக்கலைப்பு செய்ய முயன்ற 10-ம் வகுப்பு மாணவி சாவு


கருக்கலைப்பு செய்ய முயன்ற 10-ம் வகுப்பு மாணவி சாவு
x

தானிப்பாடி அருகே பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பிணியான 10-ம் வகுப்பு மாணவி கருக்கலைப்பு செய்ய முயன்றபோது உயிரிழந்தார். இது தொடர்பாக காதலன் உள்பட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பிணியான 10-ம் வகுப்பு மாணவி கருக்கலைப்பு செய்ய முயன்றபோது உயிரிழந்தார். இது தொடர்பாக காதலன் உள்பட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. அவரது மகன் முருகன் (வயது 27), தொழிலாளி.

இவர், 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி அது காதலாக மாறியுள்ளது.

அப்போது ஆசைவார்த்தை கூறி முருகன் பலமுறை மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இதனால் முருகன் மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.

கருக்கலைப்பு முயற்சி

அதைத்தொடர்ந்து வழக்கம் போல் முருகனும், மாணவியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் மாணவி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். 4 மாத கர்ப்பம் ஆன நிலையில் கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர்.

மாணவி தன்னுடைய பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

அவரை மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் பிரபு என்பவரது உதவியுடன் ரெட்டியார் பாளையம் கிராமத்திற்கு முருகன் அழைத்து சென்றுள்ளார்.

மயங்கி விழுந்து சாவு

அங்கு ஜெயராஜ் மனைவி காந்தி (65) என்பவரது உதவியுடன் மாணவிக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைக்க முயற்சித்துள்ளனர். பின்னர் அந்த வீட்டில் இருந்து மாணவி நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாணவியை சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி இறந்துவிட்டதாகவும், 4 மாத கர்ப்பிணியாக இருப்பதையும் உறுதி செய்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்து மாணவியின் தந்தை தானிப்பாடி போலீசில் புகார் செய்தார்.

அதில் தனது மகளை ஏமாற்றி கற்பழித்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து கொலை செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மாணவி கர்ப்பிணியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாணவியை கர்ப்பிணியாக்கி, கருக்கலைப்பு செய்ய முயன்ற முருகன், அவருக்கு துணையாக இருந்த பிரபு ஆகிய இருவரையும் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் கைது செய்தார்.

மேலும் தலைமறைவான மூதாட்டி காந்தியை தேடி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கி, கருக்கலைப்பு செய்த போது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story