தாரமங்கலம் அருகே 10, பிளஸ்-2 மாணவர்கள் மோதல்: அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை
தாரமங்கலம் அருகே 10, பிளஸ்-2 மாணவர்கள் மோதல் சம்பவத்தை அடுத்து அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
சேலம்
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரை 10-ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்பு மாணவர்களை, 12-ம் வகுப்பு மாணவர்கள் தாக்கினர். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று திடீரென பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறினர். பள்ளி தலைமை ஆசிரியை உமாராணி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மாணவர்களிடம் மோதலில் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story