குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி


குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x

சங்கரன்கோவிலில் குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் மாடசாமி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலையில் நண்பர்களுடன் அங்குள்ள குளம் அருகில் விளையாட சென்றார். அப்போது குளத்தில் நின்ற கொக்குகளை மாடசாமி பிடிக்க முயன்றார். இதில் குளத்தின் ஆழமான பகுதியில் தண்ணீரில் அவர் மூழ்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஓடிச் சென்று ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். உடனே பொதுமக்கள் விரைந்து சென்று, குளத்தில் இறங்கி தேடி, மாடசாமியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் டவுன் போலீசார் விரைந்து சென்று, இறந்த மாடசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவிலில் குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story