தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 11 பேர் கைது


தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 11 பேர் கைது
x

புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சரக்கு வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர்

தனியார் நிறுவனம்

புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் அய்யம்பேட்டை ரோட்டில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூரை சேர்ந்த மனோகரன் (வயது 62) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மனோகரன், நிறுவன வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், தனியார் நிறுவனத்தின் வெளியே வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள், அங்கிருந்த இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்களில் ஏற்றினர். இதை பார்த்த மனோகரன், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் உதவியுடன், அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 11 பேரை புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சொத்திக்குப்பத்தை சேர்ந்த முருகன் (வயது 49), அமரன் (40), வேலு (42), பச்சையாங்குப்பம் மாறன் (49), அக்கரைக்கோரியை சேர்ந்த பூலேந்திரன் (38), பெரியசாமி (50), ராமஜெயம் (52), சேகர் (60), அய்யம்பேட்டையை சேர்ந்த சிவலிங்கம் (49), பூபாலன் (45), செந்தில் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு சரக்கு வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story