காளை விடும் விழாவில் மாடு முட்டி 11 பேர் காயம்


காளை விடும் விழாவில் மாடு முட்டி 11 பேர் காயம்
x

காட்பாடியில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 11 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர்

காளை விடும் விழா

காட்பாடி ராஜாஜிநகர் கணக்கர் தெருவில் உள்ள பொன்னியம்மன் மற்றும் கோட்டையம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழாவையொட்டி 76-ம் ஆண்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டு பங்கேற்றன. நிகழ்ச்சிக்கு வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.

தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். விழாக்குழுவினர், பார்வையாளர்கள் விழாவிற்கான பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். பின்னர் வாடிவாசல் வழியாக 147 மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டது. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்தது.

கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆய்வு

அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டிருந்த இளைஞர்கள் மாடுகளை உற்சாகப்படுத்தினர். அப்போது கூட்டத்துக்குள் ஒரு மாடு புகுந்ததால் பார்வையாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மாடுகள் முட்டியதில் 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்ட முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாடுகள் செல்லும் பாதை?, வழிகாட்டு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா?, காளைகளுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? மாடுகள் துன்புறுத்தப்படுகிறதா? என்று ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் மிட்டல் நேரில் ஆய்வு செய்தார்.

முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3-வது பரிசாக 40 ஆயிரம் என மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story