ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
11 பவுன் நகை, வெள்ளிபொருட்கள் திருட்டு
திருவண்ணமாலை வேங்கிக்கால் ஊராட்சி செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 62). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மகன் சென்னையில் உள்ளார்.
கடந்த 26-ந் தேதி சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ரவிசந்திரன் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று திருவண்ணாமலைக்கு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 11 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சென்னைக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச்சென்றுள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
திருவண்ணாமலை டவுன் போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை கிழக்கு, தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களை சார்ந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் திருடி செல்வது, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டும், வழிப்பறி சம்பவமும் நடைபெற்று உள்ளது.
இதனால் வீட்டை பூட்டி விட்டு மக்கள் வெளியூர் செல்வதற்கு மிகவும் அச்சம் அடைகின்றனர்.
எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.