லாரி மீது வேன் மோதியதில் 11 ஆசிரியர்கள் காயம்


லாரி மீது வேன் மோதியதில் 11 ஆசிரியர்கள் காயம்
x

ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது லாரி மீது வேன் மோதியதில் 11 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர்.

பெரம்பலூர்

லாரி மீது வேன் மோதல்

தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் மாநாடு நடந்தது. இதில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் இருந்து 4 தலைமை ஆசிரியர்கள், 13 ஆசிரியர்கள் என மொத்தம் 17 பேர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாநாடு முடிந்து சொந்த ஊருக்கு வேனில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சின்னாறு பகுதியில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தினால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்தவர்களில், 3 பெண் ஆசிரியைகள் உள்பட 11 ஆசிரியர்கள் லேசான காயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் 10 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையில் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த பசும்பொன்னின் மனைவி முத்துலட்சுமி (வயது 57) என்பவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அவர்களை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய பஸ்

இதேபோல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு மாநாட்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 42 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பஸ்சில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் நேற்று அதிகாலை அந்த பஸ் விபத்துக்குள்ளானது. ஆனால் பஸ்சில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று பஸ் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story