லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Sept 2022 9:16 PM IST (Updated: 17 Sept 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மார்த்தாண்டத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு மார்த்தாண்டம் பகுதியில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வேகமாக வந்தது. உடனே போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

டிரைவர் கைது

இதில் லாரியில் 11 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லாரி டிரைவரான முளகுமூடு பழவிளை பகுதியை சோ்ந்த எட்வின் ஜெயஸ்ரீ (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ரேஷன் அரிசி மூடைகள் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட எட்வின் ஜெயஸ்ரீயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 டன் அரிசி பறிமுதல்

இதேபோல் நேற்று அதிகாலையில் மார்த்தாண்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியில் ஒரு கார் வேகமாக வந்தது. அதை போலீசார் மடக்கினார்கள். உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த காரில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அரிசியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்்கள்.


Next Story