111 விசைப்படகுகளை மீட்க வேண்டும்
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 111 விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது, கொலைவெறி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்களின் 111 மீன்பிடி விசைப்படகுகளை எல்லை தாண்டி வந்ததாகக்கூறி இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. மீனவர்களை மட்டும் விடுவித்துவிட்டு பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு தன்வசம் வைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
சுமுக பேச்சு வார்த்தை
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இலங்கை அரசு சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்களின் 111 விசைப்படகுகளை மீட்டுத்தர வேண்டும்.
கச்சத்தீவு பகுதிகளில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்ய, மத்திய அரசு சுமுக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தென் மாவட்ட மீன்பிடி தொழிலையும், மீனவர்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.