விசாரணையை விரைந்து முடிக்க 112 அதிகாரிகள் நியமனம்
மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 404 குற்றவியல் வழக்குகளில் விசாரணை விரைந்து முடிக்க 112 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தெரிவித்தார்.
மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 404 குற்றவியல் வழக்குகளில் விசாரணை விரைந்து முடிக்க 112 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தெரிவித்தார்.
பேட்டி
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-
மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 158 திருட்டு, கொள்ளை, கூட்டுக் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 124 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. 38 லட்சத்து 13 ஆயிரத்து 133 மதிப்புள்ள 127 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் திருட்டு போன 33 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் சிவகாசி பகுதியில் 3 வழிப்பறி வழக்குகள் மற்றும் சூலக்கரை பகுதியில் காரில் வந்து ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சிவகாசி வழக்கில் சிவகாசியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு 21 பவுன் நகை மீட்கப்பட்டது.
போக்சோ வழக்கு
சூலக்கரை வழிப்பறி வழக்கில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில் 47 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 5 வழக்குகளில் சாகும் வரை தண்டனையும், 6 வழக்குகளில் 22 முதல் 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 வழக்குகளில் 20 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும், 2 வழக்குகளில் ஆயுள்தண்டனையும், 2 வழக்கில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை
சாத்தூர் மேட்டமலையை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவர் மனநலம்பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 3 மாதங்களில் அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் 5 மாதங்களில் 10 கொலை வழக்குகளில் 9 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 10ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
மேலும் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 404 குற்றவியல் வழக்குகளில் விசாரணையை விரைந்து முடிக்க 112 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் கடந்த ஆண்டு நடந்த ஆதாய இரட்டை கொலை வழக்கிலும், சாத்தூரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 65 பவுன்நகை திருட்டு வழக்கிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து குற்றவியல் வழக்குகளில் விரைந்து துப்பு துலக்கிய போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.