ஜமாபந்தி நிகழ்ச்சியில் 116 மனுக்கள் பெறப்பட்டன


ஜமாபந்தி நிகழ்ச்சியில் 116 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடியில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடியில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன.

வருவாய் தீர்வாய நிகழ்ச்சி

தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2-வது நாளாக ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். இதில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களான மருதம்பள்ளம், காலமநல்லூர், கோவில்பத்து, கிடங்கல், மாமாக்குடி, ஆக்கூர், பண்டாரவடை, உடையவர்கோவில்பத்து, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்ட நல்லூர், செம்பனார்கோவில் ஆகிய வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து மேற்படி கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 116 மனுக்கள் பெறப்பட்டன.

தாலுகா வளாகத்தில் மரக்கன்றுகள்

இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நிழல் தரும் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தாலுகா வளாகத்தில் கலெக்டர் மகாபாரதி நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் (பொது), அலுவலக மேலாளர் முருகேசன், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், தனி தாசில்தார்கள் நாகலட்சுமி, சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story