விண்ணப்ப பதிவு முகாம்களில் பணியாற்ற 1,171 பேர் நியமனம்


விண்ணப்ப பதிவு முகாம்களில் பணியாற்ற 1,171 பேர் நியமனம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் பணியாற்ற 1,171 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

திருவாரூர்


கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் பணியாற்ற 1,171 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட முகாம் மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய வருவாய் தாலுகாக்களில் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய 380 நியாய விலை கடை பகுதியில் நடைபெற்றுவருகிறது.

நேற்று திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வேலுடையார் பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நியமனம்

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நேற்று தொடங்கி 2 கட்டங்களாக நடக்கிறது. இந்த பதிவு முகாம்களுக்கு 524 இல்லம் தேடிகல்வி திட்ட தன்னார்வலர்களும், 524 உதவி மைய அலுவலர்களும், 88 மண்டலஅலுவலர்களும், 35 கண்காணிப்பு அலுவலர்களும் 1,171 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடைப்பகுதியில் நடக்கும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள்

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப பதிவு முகாம் நடக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துக்கு கொண்டு வந்து கொடுக்கவேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமுக்கு எடுத்துவருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும்.

கட்டுப்பாட்டு அறை

இது குறித்து சந்தேகங்கள் இருந்தால் கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பாவா கோபால் சுவாமி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story