குமரியில் இருந்து வெளியூர் செல்ல 118 சிறப்பு பஸ்கள் இயக்கம்


குமரியில் இருந்து வெளியூர் செல்ல 118 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் தொடர் விடுமுறை முடிவடைந்ததையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 118 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பொங்கல் தொடர் விடுமுறை முடிவடைந்ததையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 118 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் விடுமுறை

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் தங்கியிருந்த குமரி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் வந்தனர். நேற்றுடன் பொங்கல் தொடர் விடுமுறை முடிவடைந்தது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து மீண்டும் மக்கள் தங்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக ரெயில்கள் மற்றும் பஸ்களின் முன்பதிவு செய்திருந்தனர்.

ரெயில்களில் முன்பதிவு அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து பஸ்களில் செல்ல திட்டமிட்டனர்.

சிறப்பு பஸ்கள்

இவர்களின் வசதியாக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னைக்கு 40 சிறப்பு பஸ்களும், கோவை -20, மதுரை- 30, தஞ்சாவூர்- 5, திருச்சி- 5 என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பணிமனையில் இருந்து சென்னைக்கு 4 சிறப்பு பஸ்களும், கோவை- 2, பெங்களூரு- 1 மற்றும் கன்னியாகுமரி பணிமனையில் இருந்து சென்னை- 4 கோவை- 1. மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து சென்னை- 4, ஈரோடு- 1, பெங்களூரு- 1 என மொத்தம் 18 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பயணிகள் கூட்டம் அலைமோதல்

விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காலை மற்றும் மதியம் நேரங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் வடசேரி பஸ் நிலையம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. இதுபோல் மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தில் உள்ள பிற பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய சிறப்பு பஸ்கள் புறப்பட்டு சென்றன. இவற்றில் ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு சென்றனர். மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story